கடன் வாங்கி கடனை அடைக்கும் நெருக்கடியில் பாகிஸ்தான்..!! உதவி செய்வது போல் பாகிஸ்தானை மொத்தமாக கைப்பற்றிய சீனா.
காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் தலையிட வேண்டும் என்று நாங்கள் ஒரு வருடமாக கூறுகிறோம். ஆனால் சவுதி அரசாங்கம் ஒவ்வொரு முறையும் அதை நிராகரிக்கிறது,
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவிற்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், தற்போது அது பொருளாதார மட்டத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையை சீனா சரியாக பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தானுக்கு நிதி வழங்கி அதை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சமீபத்தில் சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டாலர்களை கடனாக வாங்கி, சவுதி அரேபியாவிடமிருந்து பெற்ற கடன்களை பாகிஸ்தான் திருப்பி செலுத்தியுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் திவாலான நிலையில் இருந்தபோது, சவுதி அதற்கு 3 பில்லியன் டாலர்( சுமார் 22 ஆயிரம் கோடி)கடன் கொடுத்து உதவியது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கி வரும் இஸ்லாமிய ஒத்துழைப்பு என்ற அமைப்பு தலையிட வேண்டும் என்றும், இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், பாகிஸ்தான் கடந்த ஒரு வருட காலமாக கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அந்தக் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. அதாவது காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, காஷ்மீர் லடாக் என இரண்டு மாகாணங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வரும் பாகிஸ்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெறவேண்டும் என்றும், சிறப்பு அந்தஸ்து நீக்கியதன் மூலம் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டிவருகிறது.
அதுமட்டுமின்றி, காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐநா மன்றம் வரை கொண்டு சென்று சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்து அதில் தோல்வி கண்டுள்ளது. அதாவது காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில், துவக்கத்தில் ஆர்வம் காட்டிய அமெரிக்கா பிறகு காஷ்மீர் விவகாரம் என்பது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை, எனவே இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி ஒதுங்கிக் கொண்டது. ரஷ்யா,ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அது போலவே செய்துள்ளன. இந்நிலையில் ஐநா மன்றத்திலும் காஷ்மீர் விவகாரம் எடுபடவில்லை, ஐநாவுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் உள்ளிட்ட 57 இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு என்ற அமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.
அந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் ஐநா மன்றத்துக்கு பிறகு இரண்டாவது பெரிய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு செயல்பட்டு வருவதால், அந்த அமைப்பின் ஆதரவுடன் காஷ்மீர் பிரச்சனையை பெரிதுபடுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. ஆனால் சவுதி அரேபியா காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க தயாராக இல்லை. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி, வேண்டுமென்றே சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு உதவி செய்ய மறுத்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை சவுதி புரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகே அந்த நாடு எங்களது கூட்டாளி என்று நாங்கள் கருதமுடியும்.
காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் தலையிட வேண்டும் என்று நாங்கள் ஒரு வருடமாக கூறுகிறோம். ஆனால் சவுதி அரசாங்கம் ஒவ்வொரு முறையும் அதை நிராகரிக்கிறது, சவுதி இந்த பிரச்சனையில் தலையிடா விட்டால், பாகிஸ்தானுக்கு ஆதரவான இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணியை உருவாக்குவோம் என சவுதிக்கு பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் திவாலான நிலையில், சுமார் மூன்று பில்லியன் டாலர்களை கடனாக கொடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் உதவியது. ஆனால் இப்போது சவுதிக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவதால். இம்ரான் அரசாங்கம் முதல் தவணை கடனை, சீனாவிடம் பெற்று அதை சவுதிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது. தற்போது இஸ்லாமிய நாடுகளில் இருந்து தனிமைப்பட்டுள்ள, பாகிஸ்தானின் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா, பாகிஸ்தானுக்கு நிதி வழங்கி அதைத் தனது கைக்குள் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.