பாகிஸ்தானில் நடந்த கொடூரம்... 31 பேரை கொன்ற அதிபயங்கரம் குண்டுவெடிப்பு!
பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் பாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா பகுதியில் நடந்த அதி பயங்கர குண்டு வெடிப்பில் 31 பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,70,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா தொகுதியில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் உள்ள வாக்குச் சாவடியில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல, ஸ்வாபி மாவட்டத்தின் நவன் காளி வாக்குச்சாவடியில் அவாமி தேசிய கட்சியினருடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
அதே போல, பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள லர்கானாவில் ஷா முஹமது பள்ளி அருகே உள்ள வாக்குச்சாவடி அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் வன்முறை தாக்குதல்கள் இருப்பினும் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டிருக்கிறது . பாகிஸ்தானில் பல இடங்களில் எதிரெதிர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.