புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், அவர் தேநீர் அருந்தி கொண்டு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற கேள்விக்கு ''நான் தென்னிந்தியாவை சேர்ந்தவன்'' என உறுதியாக பதிலளிக்கிறார் அபிநந்தன். மற்ற கேள்விகளுக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.  

விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில்தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் சிறைபிடிக்கப்பட்ட இவரை மீட்க இந்தியா கடுமையாகா போராடி வருகிறது.  இதுகுறித்து பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதுமட்டுமல்ல, ஐநாவில் இதுகுறித்து முறையிட உள்ளது. 

இந்நிலையில்,  அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா பாகிஸ்தான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் போருக்கு செல்ல விருப்பம் இல்லை. இந்தியாவில் தாக்குதல் நடத்தவும் எங்களுக்கு விருப்பமே இல்லை. இந்த பிரச்சனைகள் சரியாக வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம். இந்த பிரச்சனைகள் மொத்தமாக சரியானால் இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்போம். போர் பதற்றம் எல்லாம் தணிந்தால்  இந்திய விமானியை விடுவிப்போம், அவர் எங்கள் கஸ்டடியில் மிகவும் பாதுகாப்பாக உள்ளார் என குரேஷி தெரிவித்து இருக்கிறார்.