விடுதலை ஆனார் நவாஸ் ஷெரீப்.... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தண்டனை நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தண்டனை நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து லண்டனில் ஆடம்பரமாக சொத்துக்கள் வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ் மருமகன் சப்தர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 3 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது
.
இதையடுத்து லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் கடந்த ஜூலை 13ம் தேதி நாடு திரும்பினார். தொடர்ந்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும், உடனடியாக ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து, நவாஸ் ஷெரிப் மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரை, விமான நிலையத்தில், அவரது கட்சி தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.