Guatemala Bus Accident: குவாத்தமாலாவில் பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்ததில் 51 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் திங்கட்கிழமை நடைபெற்ற விபத்து பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் குறைந்தது 51 பேர் பலியானதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்துள்ளது. இந்த விபத்து லத்தீன் அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்குப் பின் நடந்துள்ள மிக மோசமான சாலை விபத்து என்று கூறப்படுகிறது.
70க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தது.
குவாட்டமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ இந்த துயரச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளார். "இன்று குவாட்டமாலாவுக்கு ஒரு கடினமான நாள்" என்றும் அவர் கூறியுள்ளார்.
பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பல சிறிய வாகனங்களுடன் மோதிய பின்னர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர். "பஸ் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. உலோகத் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு, சுமார் 65 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது" என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்து பற்றி தகவல்தொடர்பு அமைச்சர் மிகுவல் ஏஞ்சல் டயஸ் கூறுகையில், பேருந்து 30 ஆண்டுகள் பழமையானது என்றாலும், அதற்கு இன்னும் இயக்க உரிமம் இருப்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார். அதிகாலை நடைபெற்ற இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததுதான் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஜனவரி 2018 இல், பெருவில் தலைநகர் லிமாவின் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில், தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் மார்ச் 2015 இல் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 54 பேர் இறந்தனர்.
