12 நாள் தங்க 61 கோடி ரூபாய் கட்டணமாம் !! சூப்பர் ஹோட்டல் எங்கிருக்கு தெரியுமா ?
அமெரிக்காவில் உள்ள ஒரு விண்வெளி நிறுவனம் முதல்முறையாக விண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஹோட்டலில் 6 பேர் கொண்ட குழு 12 நாள் தங்குவதற்கு 61 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் முதல்முறையாக ஆடம்பர ஹோட்டல் ஒன்றைக் கட்ட இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ‘ஓரியன் ஸ்பேஸ்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் வரும் 2021-ம் ஆண்டு முழு கட்டமைப்புப் பணிகளும் நிறைவுபெற்று அதன் பின் பயணிகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கப் பலருக்கும் கனவு உண்டு இதை நிஜமாக்கவே இந்த முயற்சி. மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் . விண்வெளியில் அரோரா என்ற ஸ்பேஸ் ஸ்டேஷன் ராக்கெட் வடிவில் இருக்கும், பூமியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது.
இவ்வளவு தூரத்தில் இதுவரை ஒரு ஹோட்டல் கட்டப்பட்டது இல்லை. இந்த விண்வெளி ஹோட்டலில் தங்க ஒரு பயணத்தின்போது 6 பயணிகள் உள்பட ஹோட்டல் குழுவை சேர்ந்த இரண்டு பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
மனிதர்களை அழைத்துச் செல்லும் முன் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள். விண்வெளியில் மிதந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை புவியில் இருப்பது போன்று சாதாரணமாக இருக்கலாம். இதற்காக அங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட உள்ளது. 12 நாள்கள் வரை பயணிகள் இங்குத் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விண்வெளியில் தங்கும்போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும்.
இந்த விண்வெளி பயணத்துக்கு, இந்திய பணத்தின்படி சுமார் 61 கோடி ரூபாய் செலவாகும் மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வாங்கும் பணத்தைவிட இது மிகக் குறைவு என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.