இத்தாலியில் சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் ஒரு செங்குத்தான மலைச் சுவரில் கண்டறியப்பட்டுள்ளன. ப்ரோசரோபாட் வகை டைனோசர்களுடைய இந்தத் தடங்கள், அவை மந்தைகளாக வாழ்ந்ததையும் காட்டுகிறது.
இத்தாலியின் ஸ்டெல்வியோ தேசிய பூங்காவில் (Stelvio National Park) ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய 'ட்ரயாசிக்' (Triassic) காலத்தைச் சேர்ந்த இந்தக் கால்தடங்கள், ஒரு செங்குத்தான மலைச் சுவரில் காணப்படுவது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ப்ரோசரோபாட் டைனோசர்
இந்தக் கால்தடங்களில் சில 40 செமீ விட்டம் கொண்டவை. இவை ஒரு காலத்தில் அலைகளின் சமவெளியாக (Tidal flat) இருந்து, காலப்போக்கில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியாக மாறியுள்ளன.
இவை ப்ரோசரோபாட் (Prosauropods) வகை டைனோசர்களுடையது என்று நம்பப்படுகிறது. இவை நீண்ட கழுத்து, சிறிய தலை மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்ட தாவர உண்ணிகளாகும்.
கால்தடங்கள் இணையாகவும் வரிசையாகவும் அமைந்திருப்பது, இந்த டைனோசர்கள் மந்தைகளாக (Herds) நகர்ந்து சென்றதைக் காட்டுகிறது.
வினோதமான நடத்தைகள்
இந்தக் கண்டுபிடிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கால்தடங்களுக்கு முன்னால் சில இடங்களில் கைகளின் தடங்களும் (handprints) பதிவாகியுள்ளன.
டைனோசர்கள் ஓய்வெடுக்கும்போது முன்னங்கால்களைத் தரையில் ஊன்றியிருக்கலாம் அல்லது தற்காப்பிற்காக வட்டமாக ஒன்று கூடும்போது இத்தகைய தடங்கள் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நவீன தொழில்நுட்பம்
புகைப்படக் கலைஞர் எலியோ டெல்லா ஃபெரேரா (Elio Della Ferrera) என்பவரால் இந்தத் தளம் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.
இந்தப் பகுதி மிகவும் செங்குத்தாகவும், சாதாரண பாதைகள் இல்லாத இடமாகவும் இருப்பதால், இதனை ஆய்வு செய்ய ட்ரோன்கள் (Drones) மற்றும் தொலைநிலை உணர்திறன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டியுள்ள இத்தாலிய கலாச்சார அமைச்சகம் "இது ஒரு மிகப்பெரிய அறிவியல் புதையல்" என்று கூறியுள்ளார்.


