கொரோனா தொற்றால் விற்பனை படுத்ததால், பிலிப்பைன்ஸில் ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என்ற விளம்பரத்தை கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
ஆடி மாதம், பண்டிகை காலங்களில் நம்மூரில் ஒரு புடவை வாங்கினால், ஒரு புடவை இலவசமாக கொடுப்பார்கள். அதேபோல நம்மூரில் ஷோரூமில் கார் வாங்கினால், இன்சூரன்ஸ் இலவசம் என்று அறிவிப்பார்கள். ஆனால், நம்மூரில் தீபாவளி சமயத்தில் ஒரு குளோஜாமூன் பாக்கெட்டுக்கு ஒன்னொரு பாக்கெட்டை இலவசமாகக் கொடுப்பதுபோல, பிலிப்பைன்ஸில் ஒரு கார் வாங்கினால், இன்னொரு கார் இலவசம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது ஒரு கார் நிறுவனம்.
ஒரு காருக்கு ஒன்னொரு கார் இலவசம் எப்படி முடியும் என்று குழம்பாதீர்கள். இந்த கொரோனா செய்ய முடியாததையெல்லாம் செய்ய வைத்துவருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ்தான் ஒரு காருக்கு இன்னொரு கார் இலவசம் என்ற அறிவிப்பையும் வெளியிட வைத்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 3 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு காரணமாக கார் விற்பனை படுத்துவிட்டது. கார் விற்பனையை அதிகரிக்க கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் கொடுத்தும் ஏதும் மாயாஜாலம் நடக்கவில்லை.


இந்த சூழ்நிலையில்தான் ஒரு கார் வாங்கினால், இன்னொரு கார் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.  ஹூண்டாயின் ‘சாண்டா ஃபிஇ’ என்ற காரின் விலை நம்மூர் மதிப்பில் 38.64 லட்சம். இந்த காரை விலைக்கு வாங்கினால், 10 லட்சம் மதிப்புள்ள ரீய்னா செடன் அல்லது 12 லட்சம் மதிப்புள்ள அசென்ட் கார் இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடியாக ஆஃபர் அறிவித்துள்ளார்கள். பிலிப்பைன்ஸில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவபர்களை குறி வைத்து இந்த ஆஃபரை அறிவித்துள்ளார்கள். இனியாவது கார் விற்பனை அதிகரிக்கிறதா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.