Omicron : குழந்தைகளை குறிவைக்கிறதா ஒமைக்ரான்? அதிர்ச்சியில் மருத்துவ நிபுணர்கள்!!
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் சிறு குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் சிறு குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இதேபோல் நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே ஒமைக்ரானால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடான தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் சிறு குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கான பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அவர்களை மட்டுமே ஒமைக்ரான் குறிவைத்து தாக்குகிறதா என்பதை அறிய விரிவான ஆய்வுகள் தேவை என கூறும் மருத்துவர்கள், 10 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அதிகமாக பரவுகிறது எனவும் மருத்துவமனைகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தாத பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் ஒமைக்ரான் பரவுவதாக கூறும் மருத்துவர்கள், பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே 12 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்த எந்தவொரு நாடும் அனுமதி வழங்கவில்லை. இந்தியாவில் 18 வயதுக்கு கீழான யாருக்குமே தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை. இந்த நிலையில் குழந்தைகள் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தென்னாப்பிரிக்காவில் நான்காம் அலை பரவி வருகிறது. முதல் மூன்று அலைகளில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.