கொரோனா வைரஸை தொடர்ந்து சிலந்திகளால் பரவக்கூடிய புன்யா என்ற வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்த வைரஸால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1 கோடியே 92 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 23 லட்சம் பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கடந்த ஆண்டு சீனாவின் வூபே மாகாண வுஹானில் தோன்றிய இந்த வைரஸ் சுமார் 150 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. 

வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. இது ஒருபுறம் உலகை பேரழிவுக்கு உட்படுத்தி வரும் நிலையில், சீனாவில் மற்றொரு புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ள சீனா, இந்த புதிய வைரசால் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 37 பேரும், அன்ஹுய்  வாகனத்தில் 23 பேரும் இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் குறைந்தது ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது . இந்த வைரஸ் எஸ்.எஃப்.டி.எஸ் என குறிக்கப்படுகிறது. அதாவது சிலந்தி வகை உயிரினம் கடிப்பதால் இந்த வைரஸ் பரவுகிறது  என கண்டறியப்பட்டுள்ளது. 

ஜியாங்சுவின்  தலைநகரான நான்சிங்கில் முதல் முறையாக ஒரு பெண் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டார், அவருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவரது உடலில் லூகோசைட் மற்றும் ரத்த பிளேட்டுகள் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர்  அவர் ஒரு மாத கால மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதாவது நோயாளியின் ரத்தம் மற்றும் வியர்வையில் இருந்து இந்த தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளது என லிஜி ஜியான் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஷெங் ஜி ஃ பாங்  தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியது எனவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தம், வியர்வை மூலம் இந்த வைரஸ் பரவுவதால் இது ஆபத்து நிறைந்த வைரசாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை, ஏனென்றால் இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், சீன நிபுணர்கள் கூறியுள்ளனர்.