#UnmaskingChina:எல்லைக்கு மோடி போய்வந்த எபெக்ட்..!! வாலை சுருட்டிக் கொண்ட சீனா..!!!
மேலும் எல்லையில் குவித்து வைத்துள்ள படைகளை திரும்பப் பெறுவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், மேலும் எந்த வகையில் நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்றக் கூடாது என்றும் இருதரப்பிலும் வலியுறுத்தபட்டதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்த நிலையில், இந்தியாவின் சார்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யியுடன் தொலைபேசியில் உரையாடியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடி லே சிகரத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய நிலையில் தற்போது இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மேலும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீனா தன் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய-சீன எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது, கடந்த ஜூன்-15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் சீனா எல்லையில் படைகளை குவித்து வருவதால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது, இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லடாக் பகுதிக்கு விரைந்த இந்திய பிரதமர் மோடி அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றினார். இது சீனா மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
அப்போது சீனாவின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்த இந்திய பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்திற்கான சகாப்தம் முடிந்துவிட்டது, இது வளர்ச்சிக்கான காலம் என எச்சரித்தார். மோடியின் பேச்சு சீனாவை மிகுந்த கலக்கமடைய வைத்தது, அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், சீனா விரிவாக்க எண்ணம் கொண்ட நாடு என கூறுவது முற்றிலும் தவறானது, மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என கூறியதுடன், இரு நாட்டுக்கும் இடையே ராணுவ ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொண்டார். ஆனால் இந்தியா போருக்கு தயாராக இருக்கிறது என்பதாகவே மோடியின் உரை அமைந்தது. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு சீனா முன் வந்த நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யியுடன் தொலைபேசியில் உரையாடியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை 5ஆம் தேதி இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது எனவும் அதில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மேலும் எல்லைக்கோட்டுப் பகுதியில் அமைதியை மீட்டெடுக்க இரு தரப்பிலிருந்தும் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் எல்லையில் குவித்து வைத்துள்ள படைகளை திரும்பப் பெறுவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், மேலும் எந்த வகையில் நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்றக் கூடாது என்றும் இருதரப்பிலும் வலியுறுத்தபட்டதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாடுகளும் படைகளை திரும்ப பெற ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் சீனா தன் படைகளை பாங்கொங் த்சோ,மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பின்வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரண்டு சிறப்பு பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் வாங்-யியிடம் எல்லை நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் நடவடிக்கையில் சீனா ஈடுபடக்கூடாது என்றும் மீண்டும் வலியுறுத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அவசியம் என்பதை வாங்-யி ஒப்புக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையை சீனா முழுமையாக மதிக்கவேண்டும் என்று அஜித் தோவால் மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியும், ஸ்திரத்தன்மையும் பேணுவதற்கு உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து படைகள் முழுமையாக விலகுவதை இருதரப்பும் உறுதி செய்வது அவசியம் என்பதையும் அஜித் தோவால் மற்றும் வாங்-யி ஒப்புக்கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.