இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !! இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து அறிவிக்கப்பட்டது !!
2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2018 மற்றும் 2019 ஆகிய இரு ஆண்டுகளுக்கு சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2018ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து நாட்டு எழுத்தாளர் ஓல்கா டோகார்சுவிற்கு வழங்கப்படுவதாகவும், 2019ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கேவிற்கு வழங்கப்படுவதாகவும் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
76 வயதான ஆஸ்திரிய நாடக ஆசிரியரும் நாவலாசிரியருமான பீட்டர் ஹேண்ட்கேவுக்கு, "மொழியியல் புத்தி கூர்மையின் மூலம் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு சிறப்புமிக்க படைப்புக்காக" நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று போலந்து நாவலாசிரியரான 57 வயதான டோகார்ஸுக்கின் எழுத்து நடைக்கும், கோணத்துக்கும் இந்த அங்கீகாரம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் இலக்கிய அகாடமி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் நபரை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த தேர்வுக் குழு சார்ந்து எழுந்த சில பிரச்சனைகளின் காரணமாக 2018 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
கடந்த வருடம் இலக்கியத்திற்காக நோபல் பரிசு வழங்கப்படாத நிலையில் அந்த பரிசு நடப்பாண்டில் சேர்த்து அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே நோபல் கமிட்டி அறிவித்திருந்தது. அதன்படி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.