அமெரிக்க அதிபர் தேர்தல்: ரேஸில் இருந்து விலகும் நிக்கி ஹேலி; பைடனை எதிர்த்து மீண்டும் களம் காணும் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இருந்து நிக்கி ஹேலி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில், தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளே பிரதான கட்சிகள். அமெரிக்க நாட்டு முறைப்படி, அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அக்கட்சியின் 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி, 1,497 பிரதிநிதிகளின் ஆதரவுடன் முன்னணியில் உள்ளார். அக்கட்சியின் பிற வேட்பாளர்களுக்கு மொத்தமாக 10 பிரதிநிதிகளின் ஆதரவு உள்ளது. ஜோ பைடனுக்கு அடுத்தப்படியாக இருந்த டீன் பிலிப்ஸ், மரியான் வில்லியம்சன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். எனவே, ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனே மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்ட பலர் களத்தில் இருந்தனர். ஆனால், பலரும் பின்னடைவை சந்தித்ததையடுத்து, டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹேலி ஆகிய இருவர் மட்டுமே தற்போது களத்தில் இருந்தனர்.
குடியரசுக் கட்சியின் 1,215 பிரதிநிதிகள் ஆதரவு தேவை என்ற நிலையில், 995 பிரதிநிதிகளின் ஆதரவுடன் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். 89 பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிக்கி ஹேலி இரண்டாம் இடத்தில் உள்ளார். ரான் டிசாண்டிஸ், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முறையே 9, 3 பிரதிநிதிகளின் ஆதரவு இருந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலியும் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.