நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம் சமூக வளைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. ஓரின சேர்க்கையாளரான இவர் டிம் ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்மித் கோபி என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தந்தை டமாடி கபி, தனது குழந்தை ஸ்மித்துடன் வந்தார். பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற விவாதத்தில் அவர் தனது குழந்தையை கையில் ஏந்தியபடியே காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்டு, அவரிடம் இருந்து குழந்தையை வாங்கினார். பின்னர், குழந்தையை தன்மடியில் கிடத்தி அங்கு பாட்டிலில் இருந்த புட்டி பாலை குழந்தைக்கு புகட்டினார். டிரவர் மல்லார்ட் தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். 

அதில் அவர் “பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி. டமாடி கோபி-டிம் ஸ்மித் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாடாளுமன்ற சபாநாயகரின் இந்த செயலுக்கு நியூசிலாந்து மக்களிடம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.