நியூசிலாந்தில் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக அந்நாட்டில்  நான்கு நாட்கள் வேலை , மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை  நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆதரித்துள்ளார்.  கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே நிலைகுலைய வைத்துள்ள நிலையில் ,  ஒரு சில நாடுகள் அந்த வைரஸை மிகசாமர்த்தியமாக எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாடுதான் நியூஸிலாந்து, சுமார் 50 லட்சம் அளவுக்கு மக்கள் தொகை கொண்ட  அந்நாட்டை கொரோனாவில் இருந்து மீட்டதற்காக  பிரதமர் ஜசிந்தாவை  உலக நாடுகள் பாராட்டி வருகின்றன .  அந்நாட்டில் இதுவரை மொத்தம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 1503 ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 மட்டுமே.  இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நியூசிலாந்து படிப்படியாக முழு அடைப்பை தளர்த்தியுள்ளது. 

ஊரடங்கு காலத்தில்  இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில்  ஜசிந்தா தீவிரம் காட்டி வருகிறார் ,  இந்நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் ,   வாரத்தில் 4 நாள் வேலை வேண்டும் என நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்,  வாரத்திற்கு மூன்று நாள் விடுமுறை என்பது நீண்ட விடுமுறை என்பதால் நியூசிலாந்து மக்கள் நாடு முழுவதும் பயணிக்க முடியும் ,  உள்ளூர் பொருளாதாரத்திற்காக மக்கள் பணத்தை செலவு செய்வதன் மூலம் நிச்சயம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் .  நியூசிலாந்தின் பொருளாதாரத்திற்கு சுற்றுலா மிக முக்கியமான ஒன்று ,  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் சுற்றுலா மூலம் கிடைக்கிறது . ஆனால் தற்போது கொரோனா காரணமாக நாட்டில் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ,  சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.  இதனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் 20 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஈடுகட்டும் வகையில் நாம் உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிப்பதே சிறந்த வழியாகும்,  எனவே மக்கள் நான்கு நாள் வேலை மூன்று நாள் விடுமுறை என்ற இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பயணிக்கலாம் என கூறியுள்ளார் .  தற்போது இதுகுறித்து தொழிற்சாலை முதலாளிகளிடம் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ,  நிறுவனத்தின் முதலாளிகளும் இதை செயல்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து யோசிக்க வேண்டும் ,  தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய ஊக்கப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஜசிந்தா ஆலோசனை தெரிவித்துள்ளார் . 4 நாள்  வேலை 3 நாள் விடுமுறை என்பது பணியாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் ,  சிறந்த மனம் மற்றும் உடல் நலனை வளர்ப்பதற்கு உதவும். இந்த முறையை அமல்படுத்துவதன் மூலம் நிச்சயம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.  இந்த திட்டத்தின் மூலம் வணிகமும் உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என அவர் விளக்கமளித்துள்ளார்.