ஒன்றரை லட்சம் பசுக்களை கொல்ல அரசு முடிவு..! அதிரவைக்கும் காரணம்.. விவசாயிகள் கவலை
நியூசிலாந்தில் பசுக்களுக்கு இடையே வேகமாக பரவி வரும் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஒன்றரை லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
உலகில் பால் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடு நியூசிலாந்து. பால் உற்பத்திதான் அங்கு முக்கிய பொருளாதார தொழிலாக உள்ளது. அங்கு 20,000க்கும் மேற்பட்ட மாட்டு பண்ணைகளும் 66 லட்சத்துக்கும் அதிகமான பசுக்களும் உள்ளன.
இந்நிலையில், சுமார் 1.5 லட்சம் மாடுகள் கொடூரமான பாக்டீரியாவால் தாக்கப்பட்டு ”மைக்கோ பிளாஸ்மா போவிஸ்” எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. பசுக்களுக்கு வாய்ப்புண், உடல் வீக்கம் ஆகியவை ஏற்பட்டு, அதன்பிறகு ஓரிரு நாளில் உயிரிழக்கின்றன. மேலும் நிமோனியா போன்ற கொடூர நோய்களும் ஏற்படுகின்றன. நோயால் பாதிக்கப்பட்ட பசுவிடமிருந்து மற்ற பசுக்களுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளும் மாடு வளர்ப்போரும் பெரும் கவலையில் உள்ளனர்.
பசுக்களிடம் பரவும் நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு மேற்கொண்டது. ஆனாலும் நோயை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக பரவி வருவதால் பாதிக்கப்பட்ட பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பசுக்களை கொன்று அதன் உடல்களை எரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பாக்டீரியா பரவுவதை பெருமளவில் கட்டுபடுத்த முடியும்.
நோயால் பாதிக்கப்பட்ட பசுக்களை கொல்லாவிட்டால், கால்நடை வளமே அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால், நோய் பாதிப்பு உள்ள ஒன்றரை பசுக்களை கொல்வதன் மூலம்தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்தர்ன் தெரிவித்துள்ளார்.