பிரான்ஸ் நாட்டில் பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசின் முதல் தோற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய வகை வைரஸ் மிகவும்  வேகமானதாகவும், ஆபத்தானதுமாகவும் இருக்கும் என வைரஸ் நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் இது பிரான்சில் பரவ தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

உலகை வாட்டி வதைத்துவந்த கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக  குறையத் தொடங்கிய நிலையில்,  தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததால் இந்த வைரஸ் தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உலக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர், இந்நிலையில் பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்ஆப்பிரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ்  மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது வளர்சிதை மாற்றமடைந்துள்ள இந்த வைரஸ் முன்பிருந்த வைரஸை காட்டிலும் 70% வேகமாக பரவும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புதிய வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதையடுத்து கனடா, அயர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், சவுதிஅரேபியா, சிலி, அர்ஜெண்டினா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுடனான  விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன. 

 

இந்நிலையில் பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசின் முதல் தோற்று பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்கம் தெரிவித்துள்ளது.  பிரெஞ்சு சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை இதுகுறித்த வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முதல் பிரஞ்சு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.  டிசம்பர் 19 அன்று லண்டனில் இருந்து வந்த இங்கிலாந்து குடிமகனிடம் இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்நோயாளி மத்திய பிரான்சின் டூர்ஸில்  உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார். அவர் அறிகுறிகள் அற்றவகையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

லண்டனில் இருந்து திரும்பிய பின்னர் டிசம்பர் 21ஆம் தேதி அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளால் சோதிக்கப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முதல் தொற்று இன்னும் பலருக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தினால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என இது குறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வெர்னான் கூறியுள்ளார். டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்று ஒன்பது பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.