நேபாளத்தில் பெய்து வரும் கனமழை செய்யம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. 

வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜாப்பா, மோராங், சன்சாரி, சப்ட்டாரி, சிராஹா, ரவுட்டாஹட், பன்க்கே, பர்டியா, டாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளநீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. 

மோராங் மாவட்டத்தில் உள்ள பிராட்நகர் விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம்  முதலில் தெரிவித்திருந்ததது.   

இந்நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 36  ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் 12 பேர் மாயமாகிவிட்டனர்.இதையடுத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.