நேபாளத்தில் GenZ தலைமுறை இளைஞர்களின் தொடர் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ராஜினாமா செய்துள்ளனர். போராட்டக்காரர்கள் அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நேபாளத்தில் GenZ இளைஞர்களின் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பௌடெல் மற்றும் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டிடம், பிரதமரின் இல்லம் மற்றும் பல தலைவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததுள்ளனர்.
நாட்டை விட்டு ஓடிய பிரதமர் ஒலி
நேபாள அரசாங்கம் 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்ததையடுத்து போராட்டங்கள் தொடங்கியது. இந்தத் தடையானது, இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் போராட்டத்தில் குதித்த GenZ தலைமுறை இளைஞர்கள், அரசின் ஊழலுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பிரதமர் சர்மா ஒலி பதவி விலகவும் அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், போராட்டக்காரர்களும் பதிலுக்குத் தாக்கினர். இந்த வன்முறையில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே இன்று பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவை விட்டு வெளியேறியுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. பிரதமருடன் ஏழு அமைச்சர்களும் நேபாளத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அமைச்சர்களின் அரசு இல்லங்களை நேபாள ராணுவம் காலி செய்து வருகிறது.
காத்மாண்டு மேயரின் வேண்டுகோள்
போராட்டக்காரர்கள் அமைதி காக்குமாறு காத்மாண்டு மாநகர மேயர் பாலேன் ஷா (Balen Shah) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட அவர், போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கையை அரசு ஏற்கனவே நிறைவேறிவிட்டது என்றும், போராட்டக்காரர்கள் தங்களது கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அரசியல் நிலைமை மிகவும் பதட்டமாக இருப்பதால், நாடாளுமன்றக் கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் அதிகாரிகளுக்கு ராணுவக் குடியிருப்புகளிலும் பாதுகாப்பு அதிகமாகியுள்ளது.
