இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது... கோத்தபய அரசு தடை..!
இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ’’இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது. இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் உள்ளது. அதுபோல இலங்கையிலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும்’’என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் 2016-ம் ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இலங்கையின் 72-வது சுதந்திர தினம் 2020 பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் இந்த விழா நடைபெறும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.