புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட் மூலம் பயணித்த ஓரியன் விண்கலம் நிலவில் இருந்து புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
ஓரியன் விண்கலத்தின் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலம் ஆள் இல்லா விண்கலமாகும். நாசாவின் ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் ராக்கெட்டில் ஓரியன் ஏவப்பட்ட உடனேயே, அது நாசாவுடன் படங்களைப் பகிர்ந்து கொண்டது. பின்னர், நிலவை நெருங்கிய ஓரியன் பூமி மற்றும் சந்திரனைப் பற்றிய காட்சிகளைப் பகிர்ந்து கொண்டது.
இந்தப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஓரியன் விண்கலம் பயணித்த ஆறாவது நாளிலேயே படங்களை நாசாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. விண்கலம் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 20 ஆம் தேதி நிலவின் முக்கிய மண்டலத்திற்குள் நுழைந்தது. பூமிக்கு பதிலாக சந்திரனை ஈர்ப்பு விசையாக ஓரியன் விண்கலம் மாற்றிக் கொண்டுள்ளது. இது நிலவில் தரையிறங்கவில்லை. மாறாக நிலவை சுற்றி படம் எடுத்து அனுப்பி வருகிறது. 26 நாட்களுக்குப் பின்னர் தரையில் இறங்காமல் இந்த விண்கலம் பசிபிக் கடலில் விழும் என்று நாசா தெரிவித்துள்ளது.
2 முறை தோல்வி.. விடாமுயற்சியால் ஆர்டெமிஸ் 1ஐ நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த நாசா !!

கடந்த ஆகஸ்ட் மாதமே ஓரியன் விண்கலத்தை அனுப்புவதாக நாசா திட்டமிட்டு இருந்தது. ஆனால், எரிபொரு நிரப்புதலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனுப்ப முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது அனுப்பப்பட்டு இருக்கும் இந்த திட்டத்திற்கு நாசா 4.1பில்லியன் டாலரை செலவிடுகிறது.
இது மூன்று கட்டங்களாக அனுப்பப்படுகிறது. இரண்டாவது விண்கலம் ஆர்ட்டெமிஸ் 2 என்ற பெயரில் 2024ஆம் ஆண்டில் செலுத்தப்படுகிறது. இதில், மனிதர்கள் பயணிப்பார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. மூன்றாவது முறையாக ஆர்ட்டெமிஸ் 3 என்ற பெயரில் 2025 அல்லது 2026ல் செலுத்தப்பட இருக்கிறது.
நிலாவில் மனிதர்கள் வசிக்கலாமா என்பதை அறியும் வகையில் சோதனையாக மனித திசுக்களை பரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற 3 டம்மிகள் ராக்கெட் மூலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நிலவில் மற்றும் விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுகள் மனித உடல்களை எந்த அளவுக்கு தாக்கும் என்பதை கண்டறிய இந்த மாதிரி பொம்மைகள் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
