நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் முதன்முறையாக அரோரா எனப்படும் துருவ ஒளியைக் கண்டறிந்துள்ளது. சூரியனில் இருந்து வந்த அதி ஆற்றல் துகள்கள் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துடன் மோதியதால் இந்த ஒளிர்வு ஏற்பட்டது.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து முதன்முறையாக அரோரா எனப்படும் துருவ ஒளியில் ஒளிர்வைக் கண்டறிந்துள்ளது. பூமியைத் தவிர வேறொரு கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து அரோரா தென்படுவது இதுவே முதல் நிகழ்வாகும்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி நிகழ்ந்த இந்த ஒளிர்வு, சூரியனில் இருந்து வந்த அதி ஆற்றல் துகள்கள் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துடன் மோதியதால் ஏற்பட்டது. இதனால், செவ்வாய் கிரகத்தின் இரவு வானம் முழுவதும் மென்மையான பச்சை நிறத்தில் காட்சியளித்ததாக நாசா கூறியுள்ளது.

முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் அரோரா:

முன்னதாக, சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த செயற்கைக்கோள்கள் புற ஊதாக் கதிர்களில் அரோராவை கண்டறிந்துள்ளன. ஆனால், தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலேயே துருவ ஒளி நிகழ்வு பதிவாகியிருப்பது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும். இந்த நிகழ்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, சூரியனில் இருந்து ஒரு பெரிய சூரிய வெடிப்பும் (solar flare), அதனுடன் கரோனல் திணிவு வெளியேற்றமும் (coronal mass ejection) நிகழ்ந்தன. இதன் விளைவாக அதிக அளவிலான சூரிய ஆற்றல் துகள்கள் விண்வெளியில் பரவின.

இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் முன்னரே கணித்து, பெர்சிவரன்ஸ் ரோவரில் உள்ள கருவிகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். ரோவரில் உள்ள சூப்பர்கேம் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி (SuperCam spectrometer instrument) பச்சை நிற துருவ ஒளியின் அலைநீளத்தைத் துல்லியமாகக் கண்டறிந்தது. பின்னர், மாஸ்ட்கேம்-Z கேமரா (Mastcam-Z camera) மூலம் லேசாக ஒளிரும் பச்சை வானத்தின் புகைப்படத்தை விஞ்ஞானிகள் பதிவுசெய்தனர். பூமியில் அரோரா உருவாகும் அதே முறையில்தான் செவ்வாய் கிரகத்திலும் நிகழ்ந்துள்ளது.

அரோரா நிகழ்வு எப்படி நடக்கிறது?

ஒஸ்லோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எலிஸ் ரைட் நட்சென் கூறுகையில், பூமியில் காந்தப்புலம் சூரியத் துகள்களை துருவப் பகுதிகளுக்குள் செலுத்துகிறது. ஆனால் செவ்வாய்க்கு காந்தப்புலம் இல்லாததால், சூரியத் துகள்கள் கிரகம் முழுவதையும் ஒரே நேரத்தில் தாக்குகின்றன. இதுதான் துருவ ஒளி கிரகம் முழுவதும் தோன்றியதற்குக் காரணம்" என்றார்.

சூரிய துகள்களுக்கும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனுக்கும் இடையிலான வினை பச்சை நிறத்தை உருவாக்கியது. பூமியின் துருவ ஒளி நிகழ்வு பிரகாசமாக இருக்கும் நிலையில், செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட ஒளி மங்கலாக இருக்கிறது.

எதிர்காலக் கணிப்புகள்:

இந்த குறிப்பிட்ட அரோரா மனித கண்களுக்குப் புலப்படாது. ஆனால், அதிக தீவிரமான சூரிய புயல்கள் எதிர்காலத்தில் நிகழும்போது பிரகாசமான அரோராக்களை உருவாக்கலாம், அவை விண்வெளி வீரர்களின் கண்களுக்குப் புலப்படும். கேமராக்கள் மூலம் இதைப் படம் பிடிக்க முடியும். இந்த நிகழ்வு பூமியைப் பாதிக்கவில்லை. வளிமண்டலம் உள்ள அனைத்து சூரிய குடும்ப கிரகங்களிலும் அரோராக்கள் ஏற்படுகின்றன.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் சூரியனுடனான அதன் தொடர்புகள் குறித்த நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு மேம்படுத்தும். எதிர்கால செவ்வாய் கிரக பயணங்களுக்கு இந்தத் தகவல் உதவும். ஒருவேளை மனிதர்கள் செவ்வாயில் நீண்ட காலம் தங்கினால், அடிவானம் முதல் உச்சி வரை மென்மையான பச்சை நிற ஒளிர்வை அவர்கள் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்று நட்சென் கூறுகிறார்.