அமெரிக்காவை விட, சீனாவை விட, அமெரிக்கர்கள் பெருமளவில் இந்தியாவுக்கே தங்களது ஆதரவை அளிப்பவர்களாக உள்ளனர் எனவும், இந்தியா-சீனா இடையிலான  இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா இந்தியாவையே ஆதரிக்க வேண்டுமென பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்புவதாக, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

லோவி இன்ஸ்டிடியூட் தி இன்டர்பிரெட்டர் என்ற இந்த ஆய்வு நிறுவனம், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராணுவ மற்றும் பொருளாதார மோதல்கள் குறித்து அமெரிக்க மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.  ஜூலை 7 அன்று சுமார் 1012 அமெரிக்கர்களிடம் இணையதளத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ஒரு வரியில் அவர்கள் பதிலளிக்கும்படி கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா யாருக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?  அப்போது நீங்கள் சீனாவை ஆதரிப்பீர்களா? அல்லது இந்தியாவை ஆதரிப்பீர்களா?  சீனா இந்தியா இடையே பொருளாதார மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

இந்த கருத்துக்கணிப்பின் முடிவை, அந்த ஆய்வுக் குழு இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது, அது பெரும்பாலும் இந்தியாவிற்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் சுமார்  63.6 சதவீதம் பேர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ராணுவ மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவையே ஆதரிக்க வேண்டுமென விரும்புவதாக 32.6% பேர் தெரிவித்துள்ளனர். 3.8 சதவீதத்தினர் அமெரிக்கா சீனாவை ஆதரிக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறினார். அதேபோல்,  இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார மோதல் ஏற்படும் என்ற  கேள்விக்கு, அதிலும் சுமார் 36 .3 சதவீதம் பேர் இந்தியாவுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 3.1 சதவீதம் பேர் சீனாவை அமெரிக்க ஆதரிக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தியாவை விரும்புவதாகவும்,  அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்க வேண்டுமென விரும்புகிறார்கள் எனவும் இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியா-சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உண்மையான கட்டுப்பாட்டு  எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனா நம்பமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா குற்றம்  சாட்டியுள்ளது. சீனாவுக்கு இயல்பாகவே பிராந்தியத்தில் மோதல்களை தூண்டும் மனநிலை உள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஹாங்காங்கில் ஜனநாயக முயற்சிகளை முறியடிப்பது, தைவானுக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற சீனாவின் பரந்துபட்ட நடவடிக்கையின் காரணமாக  அமெரிக்கர்களுக்கு இந்தியா மீது மரியாதை ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் இந்தியாவை அவர்கள் ஆதரிப்பதாகவும் அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.