சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடி பயணம் செய்ய தனது காரை வழங்கியுளார். அந்த காரின் விலை, சிறப்பங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
PM Modi Uses Xi Jinping’s Hongqi L5 Car in China! சீனாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்றார். கல்வான் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, சீனா இடையே விரிசல் ஏற்பட்ட பின் 7 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். அமெரிக்கா இந்தியாவுக்கு 50% வரி விதித்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தனது காரை மோடிக்கு வழங்கிய ஜின்பிங்
சீனா சென்றுள்ள பிரதமர் மோடி பயணம் செய்வதற்கு ஹாங்சி எல்5 (Hongqi L5) என்ற சொகுசு கார் வழங்கப்பட்டுள்ளது. அந்த காரில் தான் பிரதமர் மோடி சீனாவில் பயணம் செய்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் ஹாங்சி எல்5 என்ற இந்த காரையே தனது அதிகாரபூர்வமான வாகனமாக பயன்படுத்தி வருகிறார். தான் பயன்படுத்தும் காரையே பிரதமர் மோடிக்கும் அவர் வழங்கியுள்ளார். சீனத் தலைவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் மட்டுமே இந்த கார் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
புதினை விட மோடிக்கு முக்கியத்துவம்
இப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் ஜின்பிங் பயன்படுத்தும் ஹாங்சி எல்5 கார் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு மட்டும் இந்த கார் வழங்கப்பட்டுள்ளது உலகளவில் பேசும்பொருளாகியுள்ளது. இப்போது இந்த காரின் சிறப்புகளை பார்ப்போம்.
சீன பெருமையின் அடையாளம்
ஹாங்சி (Hongqi) என்றால் சீனாவின் மாண்டரின் மொழியில் "சிவப்பு கொடி" என்று பொருள். ஹாங்சி எல்5 அதிநவீன கார் சீன அரசின் ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் ஒர்க்ஸ் என்ற குழுமத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேட் இன் சைனா எனற பெருமையுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கார் சீனாவின் தேசியப் பெருமையின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த கார் இப்போது சீனப் பணக்காரர்களுக்காக அவர்கள் விரும்பியபடி பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
காரின் சிறப்பம்சங்கள்; விலை என்ன?
ஹாங்சி எல்5 காரில் சக்திவாய்ந்த 6.0 லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டி விடும் திறன் கொண்டது. அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கிமீ ஆகும். 5.5 மீட்டருக்கும் மேல் நீளமும், 3 டன்களுக்கு மேல் எடையும் கொண்டது. விசாலமான இருக்கைகள், லெதர் அப்ஹோல்ஸ்டரி, மசாஜ், ஹீட்டிங், காற்றோட்டம் மற்றும் பொழுதுபோக்குத் திரைகள் உள்ளன. மேலும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமராக்கள் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இந்த காரின் விலை சுமார் 5 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) ஆகும்.
மாமல்லபுரத்தில் ஓடிய இதே கார்
சீன அதிபர் ஜி ஜின்பிங் பொது நிகழ்வுகளில் அடிக்கடி ஹாங்சி எல்5 காரை தான் பயன்படுத்துகிறார். கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்துக்கு வருகை தந்த ஜி ஜின்பிங், இதே காரில் தான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
