2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தட்டிச் சென்றுள்ளார்
மத்திய அமெரிக்க நாடான சான் சால்வடாரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிப் போட்டியில் நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் வெற்றி பெற்றுள்ளார்.
சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில், நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் 2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியான அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் முடி சூட்டினார்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா நாட்டை சேர்ந்த பெண் என்ற பெருமையை ஷெய்னிஸ் பலாசியோஸ் பெற்றுள்ளார். தாய்லாந்து நாட்டின் ஆண்டனியோ ப்ரொசில்ட் முதல் ரன்னராகவும், ஆஸ்திரேலியாவின் மராயோ வில்சன் இரண்டாவது ரன்னராகவும் தேர்வாகினர்.
72ஆவது பிரபஞ்ச அழகி போட்டியில் மொத்தம் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் சண்டிகரை சேர்ந்த 23 வயதான ஸ்வேதா ஷ்ரத்தா பங்கேற்றார். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியை தேர்வு செய்யும் போட்டிக்கான இறுதிச் சுற்று இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இறுதிச் சுற்றுக்கு தேர்வான 20 பேரில் இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா ஷ்ரத்தாவும் ஒருவர். ஆனால், அவர் வெற்றியாளராக தேர்வாகவில்லை.
1962 போரில் விமானப்படையை நிலைநிறுத்தாததால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு: ராஜீவ் சந்திரசேகர்!
இறுதிச் சுற்றில் நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸிடம் வாழ்க்கையில் ஒரு நாளைக் கழிக்க யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்வ் கேட்கப்பட்டது. அதற்கு, 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் தத்துவஞானி மற்றும் பெண்ணியவாதியான மேரி வோல்ஸ்டோன்கிராஃப்டைத் தேர்ந்தெடுப்பதாக அவர் பதிலளித்தார். எல்லைகளை உடைத்து பல பெண்களுக்கு அவர் வாய்ப்பளித்ததாக ஷெய்னிஸ் பலாசியோஸ் கூறினார்.
