Ukraine-Russia War: உக்ரைன் மக்களுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்... உதவிக்கரம் நீட்டும் WHO!!
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மருந்து பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளத்து.
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மருந்து பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளத்து. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. ரஷ்யாவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தலைநகர் கிவ் மற்றும் கார்கிவ் நகரில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். உயிருக்கு பயந்து உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தின் கடுமையான தாக்குதல் காரணமாக அங்கு மருத்துவ தேவை அதிகரித்துள்ளது. அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மருந்து பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளத்து. இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம், உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார். லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருவதால், கொரோனா பரிசோதனை மேற்கொள்வது சவாலாக உள்ளதாகவும் இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.