உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல்... இந்தியாவுக்காக ஹபீஸ் சயீத்தை தட்டித்தூக்கிய பாகிஸ்தான்..!
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் உலகையே உலுக்கியது. இதற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் நெருக்கடி கொடுத்து வந்தது. அதன்பின்னர் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய அமைப்புகள் சேர்ந்த 120 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, ஹபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிக்க நிதி திரட்டியதாக முல்தான், குஜ்ரன்வாலா, லாகூர் ஆகிய இடங்களில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை லாகூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.