பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு….. எப்படி மீட்டார்கள் தெரியுமா ?
இந்தோனேஷியாவில் காய்கறிகள் பறிக்க தோட்டத்துக்குச் சென்ற பெண் ஒருவரை ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது. இதையடுத்து பாம்பின் வயிற்றைக் கிழித்து அந்தப் பெண்ணை மீட்டபோது அவர் உயிர் இழந்திருந்தார்.
இந்தோனேஷியாவின் முன்னா தீவில் உள்ள சுலாவெசி நகரை அடுத்து பெர்சியாபென் லாவெலா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வா திபா என்ற பெண் தனது தோட்டத்தில் காய்கறிகள் பறிப்பதற்காக சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து வா திபாவின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர். அவர் காய்கறிகள் பறிக்கச் சென்ற தோட்டத்திலும் தேடிப்பார்த்தனர். அப்போது அவர்கள் பார்த்த காட்சி அதிர்ச்சி அடையச் செய்தது.
அந்தத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்துக் கிடந்தது. அந்த பாம்பு ஏதோ இரையை விழுங்கிவிட்டு அங்கிருந்து செல்ல முடியாமல் இருப்பதை அந்த கிராம மக்கள் பார்த்தனர்.
அப்போதுதான் அவர்களுக்கு ஸ்ட்ரைக் ஆனது. ஒரு வேளை வா திபாவை பாம்பு விழுங்கியிருக்கலாம் என அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறை அனுமதியுடன் கிராம மக்கள் பாம்பின் வயிற்றுப் பகுதியை கத்தியால் கிழித்து பார்த்தனர். அப்போது திபா உள்ளே சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுவாக அந்த கிராமத்தில் உள்ள தோட்டப்பகுதிகளில் மலைப்பாம்புகள் அடிக்கடி தென்படும் என்றும், இப்படி ஒரு 20 அடி நீள மலைப்பாம்பை தாங்கள் இதுவரை கண்டதில்லை என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது வரை ஆடுகள், கோழிகள் போன்றவற்றைத்தான் இந்தப் பாம்புகள் விழுங்கியிருப்பதாகவும், முதன் முதலாக ஒரு பெண்ணை பாம்பு விழுங்கியிருப்பது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.