வங்கதேச மாணவர் தலைவர் ஒஸ்மான் ஹாதி கொலை வழக்கில் தேடப்படும் பைசல் கரீம் மசூத், துபாயில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் நிரபராதி என்றும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு கொலையைச் செய்து தன் மீது பழி போடுவதாகவும் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் எழுச்சியின் முக்கியத் தலைவரான ஒஸ்மான் ஹாதி கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி பைசல் கரீம் மசூத் (Faisal Karim Masud) வெளியிட்டுள்ள வீடியோ செய்தி அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச போலீசார், பைசல் கரீம் மசூத் மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்குள் தப்பிச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால், தற்போது மசூத் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயில் இருக்கிறேன்

அதில், "நான் ஓஸ்மான் ஹாதி கொலையில் ஈடுபடவில்லை. இது என் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கு. வங்கதேச போலீசாரின் மிரட்டல் காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேறி தற்போது துபாயில் இருக்கிறேன். என்னிடம் 5 ஆண்டுகால துபாய் விசா உள்ளது." எனத் தெரிவித்தார்.

"ஹாதிக்கும் எனக்கும் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. அவரிடம் வேலை வாய்ப்புக்காக 5 லட்சம் டாக்கா முன்பணமாகக் கொடுத்துள்ளேன். அவர் கேட்ட போதெல்லாம் அவரது நிகழ்ச்சிகளுக்கு நிதி உதவியும் செய்துள்ளேன்." என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிய மசூத், ஓஸ்மான் ஹாதி 'ஜமாத்-இ-இஸ்லாமி' அமைப்பால் உருவாக்கப்பட்டவர் என்றும், அதே அமைப்பைச் சேர்ந்தவர்களே அவரைப் படுகொலை செய்துவிட்டு பழி தன் மீது போட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Scroll to load tweet…

வங்கதேச போலீசாரின் நிலைப்பாடு

மசூத் மற்றும் ஆலம் கிர் ஷேக் ஆகிய இருவரும் ஹலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாகவும், இந்தியத் தரப்பு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் வங்கதேச காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்தியாவின் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவிற்கு எதிராகப் பரப்பப்படும் 'பொய்யானப் பிரச்சாரம்' (False Narrative) என இந்தியா சாடியுள்ளது. மேகாலயா எல்லைப் பாதுகாப்புப் படையும் இத்தகைய ஊடுருவல் எதுவும் நடக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

ஒஸ்மான் ஹாதி கொலை

கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி டாக்காவில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் ஒஸ்மான் ஹாதி சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 18-ஆம் தேதி உயிரிழந்தார். ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஹாதி ஒருவர் என்பதால், இவரது மரணம் வங்கதேசத்தில் மிகப்பெரிய வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்தது.