சிங்கப்பூர்.. 1971 முதல் 2023 வரை.. திருட்டில் வைர விழா கொண்டாடப்போகும் மூதாட்டி - அலுத்துப்போன போலீசார்!
Singapore News : விநோதங்கள் நிறைந்த இந்த உலகத்தில், பல வினோதமான மனிதர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. அந்த வகையில் மிகவும் வினோதமான மூதாட்டியாக திகழ்ந்து வருகின்றார் சிங்கப்பூரில் வசிக்கும் மலேசிய பெண்மணி.
கடந்த 1971ம் ஆண்டு முதல், அதாவது கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் திருட்டு குற்றத்திற்காக பலமுறை தண்டிக்கப்பட்ட 75 வயதான மலேசியப் பெண்மணிக்கு, கடந்த நவம்பர் 1ம் தேதி 2023 அன்று மீண்டும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறை செல்வது இது எத்தனையாவது முறை என்பது அவருக்கே வெளிச்சம்.
சிங்கப்பூரின் ஷின் மின் டெய்லி நியூஸ் அளித்த தகவலின்படி, என்ஜி கிம் ஸ்வீ என்ற அந்த மூதாட்டி, திருட்டு வழக்கில் சிக்கி கடந்த 1971ல் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2004ல் 10 ஆண்டுகள் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பலமுறை அவர் சிறை சென்று திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் மட்டுமின்றி, தனது சொந்த நாடான மலேசியாவிலும் 1977, 1985, 1987, 2015, 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பொதுவெளியில் மக்களிடம் திருடுவது மற்றும் புட்டை உடைத்து வீடு புகுந்து திருடுவது போன்ற குற்றங்களுக்காகவும் Ng தண்டனை பெற்றதாக சிங்கப்பூர் நாட்டு ஊடங்கம் ஒன்று தகவல் அளித்துள்ளது.
கும்பலாக இடத்தில் கைவரிசை
வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, Ng Kim Swee ஒரு தொடர் திருடி ஆவார், அதிலும் அவர் நெரிசலான சாலைகள் மற்றும் கடைகளில், திறந்த கைப்பைகளுடன் நிற்கும் நபர்களை தான் குறிவைப்பாராம். அதுமட்டுமல்லாமல் காலத்திற்க்கு தகுந்தாற்போல தன்னை மாற்றிக்கொண்டு, சிசிடிவியின் பார்வைக்கு வெளியே தான் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றுகிறார் அவர்.
சுற்றுலாப் பயணிகள் தான் பிரதான இலக்கு
அந்த மூதாட்டி S$7,000 மதிப்புள்ள பொருட்களையும் பணத்தையும் திருடியது தான் அவரது சமீபத்திய குற்றமாகும். அதிலும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளே என்றும் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 1, 2023 அன்று நடந்த ஒரு சம்பவத்தில், தகாஷிமாயா ஷாப்பிங் சென்டரில் உள்ள செயின்ட் லீவன் பேக்கரியில் 65 வயதான இந்தோனேசிய சுற்றுலாப் பயணியை அந்த மூதாட்டி குறிவைத்துள்ளார். Ng பாதிக்கப்பட்டவரின் அருகில் நின்று, ஒரு கையில் ரொட்டிப் பொட்டலத்தை எடுத்து, மற்றொரு கையால் பாதிக்கப்பட்டவரின் பணப்பையை கைப்பையில் இருந்து எடுத்துள்ளார்.
பணப்பையில் கார்டுகள் மற்றும் S$2,000 மற்றும் 3 மில்லியன் ரூபாய் (S$258) பணம் இருந்துள்ளது. மேலும் ஜனவரி 22, 2023 அன்று நடந்த மற்றொரு சம்பவத்தில், மெரினா பே சாண்ட்ஸில் உள்ள லூயிஸ் உய்ட்டன் கடையில் 44 வயது சிங்கப்பூரர் ஒருவரிடமிருந்து குஸ்ஸி வாலட்டை Ng திருடியுள்ளார். Ng கைது செய்யப்பட்ட பிறகு, பிப்ரவரி 8, 2023 அன்று நடந்த இரண்டு சம்பவங்களுக்கும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D