30 வருடங்களாக நடைபெற்று வந்த இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமான உள்நாட்டுப் போர் கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்து, இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போரில் அப்பாவி மக்கள் பலபேரைக் கொன்றதாக இலங்கை அரசு மீது ஐ.நா சபையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் போரில் விடுதலைப் புலிகள் தவறு செய்ததாக கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், புலிகள் தோல்வியடைந்த நாள் தான் தன் வாழ்வின் சிறந்த நாள் என்று கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அதிபர்  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சமாதான பேச்சுவார்த்தைகளின் போது கிடைத்த வாய்ப்புகளை விடுதலைப் புலிகள் தவறவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டிய முத்தையா முரளிதரன் இலங்கை அரசு மற்றும் புலிகள் அமைப்பு இரண்டு தரப்பும் தவறு செய்ததாக கூறினார்.

போர் நடந்த காலங்களில் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் அச்சத்தில் வாழ்ந்ததாகவும் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் 2009 இல் போர் நிறைவு பெற்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தன் வாழ்வின் சிறந்து நாள் என்று தெரிவித்த அவர் புலிகளின் அழிவிற்கு பிறகே அச்சமின்றி நடமாட முடிந்ததாக தெரிவித்துள்ளார்.