லாவோஸ் நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணை இடிந்து விழுந்ததில்  6 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் அட்டாபேயு மாகாணத்தில் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

5 ஆண்டுகளாக அணையின் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற வருகின்றன. இது வரை 90 சதவீத பணிகள்  நிறைவடைந்துள்ள  நிலையில், அடுத்த ஆண்டு  அணையை திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்நிலையில், அணையின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெள்ளமாக உருவெடுத்து 6 கிராமங்களை மூழ்கடித்தது.

இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது வரை  7000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும்  தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.