பேனா, பென்சிலைப் போல் ரெடிமேட் டாய்லெட்டை கொண்டு வந்த கிம் ஜங்...! ஏன் தெரியுமா?
சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜங் இடையேயான பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. சிங்கப்பூர் வந்த கிம் ஜங், தான் கொண்டு வந்த ரெடிமேட் டாய்லெட்டைத்தான் பயன்படுத்தியதாக தென்கொரிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த போதும், அவர் அங்கிருந்த டாய்லெட்டை பயன்படுத்தாமல் ரெடிமேட் டாய்லைட்டையே பயன்படுத்தி உள்ளார்.
பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்க அதிபர்கள்கூட அச்சம் கொள்ள மாட்டார்கள். அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள்தான் அதிக கெடுபிடி காட்டுவார்கள். ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜங், பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனடத்துடன் இருப்பார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு கிம் ஜங், வெளிநாடு ஒன்றில் அரசியல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
தன்னைப் பற்றிய எந்தவொரு விஷயமும், எதிரிகள் வசம் பரவிவிடக் கூடாது என்பதில் கிம் ஜங், கண்ணும் கருத்துமாக உள்ளார். தன்னைப் பற்றிய ஏதாவது தகவல் எதிரிக்கு கிடைத்து விட்டால் தன்னைத் தாக்குவது எளிது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ரெடிமேட் டாய்லெட்டை கொண்டு வந்தாராம்.
ஓட்டல் கழிவறைகளை கிம் ஜங் ஏன் பயன்படுத்தவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சிறுநீர், மலம் போன்றவற்றில் இருந்து எதிரிகள் தன் உடலில் உள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்காகவே ரெடிமேட் டாய்லெட்டை உடன் கொண்டு வந்தாராம்.
கிம், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னரே உணவு பொருட்கள், உடைகள், குடிநீர், குண்டு துளைக்காத கார்கள் என வந்திறங்கின. நட்சத்திர விடுதியில் இருந்தபோதும் விடுதி உணவுகளை அவர் உண்ணவில்லை. பிரத்யேக சமையல்காரர்கள் தயாரித்த உணவையே அவர் உட் கொண்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் கிம், மதிய விருந்து அருந்தினார். இந்த விருந்து நிகழ்ச்சியின்போது மட்டும் வெளி உணவை கிம் ஜங் உட் கொண்டார்.