நிறைய குழந்தை பெத்துக்கோங்க... கண்ணீர் விட்டு கதறும் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்
ஐ.நா. தகவலின்படி, வட கொரியாவில் கருவுறுதல் விகிதம் (ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) 1.8 ஆக உள்ளது. சில அண்டை நாடுகளை விட வட கொரியாவின் கருவுறுதல் விகிதம் அதிகமாகவே உள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதத்தை சமாளிக்க பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அவர் கண்ணீரைத் துடைத்தபடியே நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், கிம் ஜாங் உன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கீழே பார்த்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஞாயிற்றுக்கிழமை பியோங்யாங்கில் நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் கிம் ஜாங் உன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பிறப்பு விகிதங்கள் குறைவதைத் தடுப்பது மற்றும் நல்ல குழந்தை பராமரிப்பு ஆகியவை நமது வீட்டு பராமரிப்பு கடமைகள்" என்று எடுத்துரைத்தார்.
நாட்டை வலுப்படுத்துவதில் தாய்மார்களின் பங்களிப்புக்காக அவர் நன்றி தெரிவித்தார். "கட்சி மற்றும் மாநிலப் பணிகளைக் கையாள்வதில் எனக்கு சிரமம் இருக்கும்போது எல்லாம் நானும் தாய்மார்களைப் பற்றியே நினைப்பேன்" என்றும் கிம் கூறியுள்ளார்.
ஐ.நா. தகவலின்படி, வட கொரியாவில் கருவுறுதல் விகிதம் (ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) 1.8 ஆக உள்ளது. சில அண்டை நாடுகளை விட வட கொரியாவின் கருவுறுதல் விகிதம் அதிகமாகவே உள்ளது. தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு 0.78 ஆகக் குறைந்தது. ஜப்பானில் இந்த எண்ணிக்கை 1.26 ஆகக் குறைந்துள்ளது.
தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஒரு நகரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மேட்ச்மேக்கிங் நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
சுமார் 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வட கொரியா, சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான உணவு பற்றாக்குறையுடன் போராடியுள்ளது. 1990 களில் ஏற்பட்ட கொடிய பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளையும் வட கொரியா சந்தித்துள்ளது.