கனடாவில் தீவிரவாத சக்திகள்: ஜஸ்டின் ட்ரூடோ கட்சி எம்.பி. குற்றச்சாட்டு!
கனடாவில் தீவிரவாத சக்திகள் அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி. பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சொந்த கட்சியான கனடா லிபரல் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா. இவர், கனடாவில் தீவிரவாத சக்திகள் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கனடாவில் வசிக்கும் இந்துக்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல தீவிரவாத சக்திகள் தாக்குதல் நடத்துவதாகவும், அச்சுறுத்துவதாகவும் செய்திகள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து இந்து-கனடியர்களும் அமைதியாகவும், விழிப்புடனும் இருக்குமாறும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குத் தெரிவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சந்திரா ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குச் செல்லுங்கள் என்று கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு தெரிவித்தார். இதனால், இந்து-கனடியர்கள் பலர் அச்சத்தில் இருப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். இந்து-கனடியர்கள் அமைதியாக ஆனால் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்துக்களுக்கு எதிராக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உங்கள் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களிடம் புகார் அளிக்கவும்.” என பதிவிட்டுள்ளார்.
இந்து கனேடியர்கள் எதிர்வினையாற்றுவதற்கு தூண்டுவதுடன், கனடாவில் உள்ள இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பிரிக்கவும் காலிஸ்தான் இயக்கத் தலைவர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், கனேடிய சீக்கியர்களில் பெரும்பான்மையானவர்கள் காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிக்கவில்லை எனவும் சந்திரா ஆர்யா தெளிவுபடுத்தியுள்ளார்.
“தெளிவாகச் சொல்கிறேன். கனேடிய சீக்கிய சகோதர சகோதரிகளில் பெரும்பாலானோர் காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிக்கவில்லை. பெரும்பாலான சீக்கிய கனேடியர்கள் பல காரணங்களுக்காக காலிஸ்தான் இயக்கத்தை பகிரங்கமாக கண்டிக்க மாட்டார்கள் ஆனால் அவர்கள் இந்து-கனடிய சமூகத்துடன் ஆழமாக நட்பு கொண்டுள்ளனர்.” என அவர் கூறியுள்ளார்.
கனேடிய காலிஸ்தான் இயக்கத்தின் தலைவரால் இந்து கனேடியர்களுக்கு விடுக்கப்பட்ட இந்த நேரடி எச்சரிக்கை, இந்து கோவில்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதிகளால் இந்து பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நடந்த பொதுக் கொண்டாட்ட மனநிலையை மேலும் அதிகரித்துள்ளது எனவும் சந்திரா ஆர்யா தெரிவித்துள்ளார்.
“கனடா உயர்ந்த தார்மீக விழுமியங்களைக் கொண்டுள்ளது மற்றும் நாங்கள் சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துகிறோம்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார். "பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துதல்" மற்றும் "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரில் குற்றங்கள் அனுமதிக்கப்படுவதை வெறுப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் இந்தியா - கனடா மோதல்: கனேடியர்களுக்கு விசா சேவை நிறுத்தியது இந்தியா
முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில், கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியதாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகளை இரு நாடுகளும் வெளியேறச் சொல்லி உத்தரவிட்டுள்ளன. கனடா நாட்டவருக்கான விசா வழங்கலை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவுக்கு கனடா நாட்டை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டாம் என அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரங்கள் கனடாவில் வசிக்கும் இந்தியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.