அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இது குறித்து தெரிவிக்கையில், வரவிருக்கும் காலம் மிகவும் கடினமானதாக இருக்கும், ஆனால் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என விரக்தி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சுமார் 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதுவரை உலக அளவில் 7.83  கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குணமாகி உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.86 கோடியாக உள்ளது. இதுவரை அங்கே 3.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்குப் பின்னர் அந்நாட்டில் வைரஸ் கொரோனா தொற்றின் வேகம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் 1.6  மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்க அதிபராக  புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், இது குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் காலம் மிகவும் கடினமாக இருக்குமென்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொரோனா தடுப்பு பணிக்குழுவின் ஆலோசகர் டாக்டர் அந்தோணி  பாசியுடன் ஜோ பைடன் உரையாடியுள்ளார். அதில், வரவிருக்கும் புதிய அரசாங்கம் முதலில் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பரிசீலிக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்த ஜோ பைடன், வரவிருக்கும் காலம் மிகவும் கடினமானதாக இருக்கும் கொரோனாவுக்கு எதிரான போரை நாம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும். அது இன்னும்கூட ஓயவில்லை. 

விரைவில் அமெரிக்கா தடுப்பூசி ஆராய்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் என நம்புகிறேன் என்றார்.  இது குறித்து கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் டிசம்பர் 20ம் தேதியுடன் முடிவடைந்த ஒருவாரத்தில் 1.6 மில்லியன் புதிய தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புள்ளிவிவரங்களின்படி இது முந்தைய வாரத்தை விட 14 சதவீதம் அதிகமாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி எந்த ஒரு நாட்டிலும் இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காணவில்லை, ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இது தீவிரமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன, ஒரு வாரத்தில் அங்கு சுமார் 5 லட்சம் புதிய தொற்றுகள் உருவாகி இருப்பதாகவும் அது அதிர்ச்சி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.