20 விநாடிக்காக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்..! ஜப்பான் அரசுக்கு குவியும் பாராட்டுகள்..! இப்படிலாம் இந்தியாவுல எப்போதான் நடக்கும்?
ஜப்பானில் 20 விநாடிகள் முன்னதாக ரயில் புறப்பட்டதற்காக ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரிய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானியர்கள் பொதுவாகவே நேரம் தவறாமையை கடைபிடிப்பர். நேரம் தவறாமையால் உலகத்துக்கே முன்னோடியாக திகழ்பவர்கள் ஜப்பானியர்கள். இந்தியாவைப் போன்று அல்லாமல், விழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்துமே குறித்த நேரத்தில் சரியாக தொடங்கும். பேருந்து, ரயில் போன்ற பொதுமக்களுக்கான சேவை சாதனங்கள் நொடிக்கணக்கில் கூட வித்தியாசம் இல்லாமல் மிகவும் துல்லியமாக சென்றுவரும்.
ஜப்பானின் தலைநகரும் மக்கள் நெருக்கடி அதிகம் கொண்ட நகரமுமான டோக்கியோவின் மிக முக்கியமான போக்குவரத்தே ரயில் போக்குவரத்துதான். தினமும் லட்சக்கணக்கானோர் அலுவலகங்களுக்கும் தங்களது பணிகளுக்கும் ரயிலில்தான் பயணிக்கின்றனர்.
மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில்கள், நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கின்றன. இந்நிலையில், முதன்முறையக ஜப்பானில் ரயில் ஒன்று குறிப்பிட்ட நேரத்தைவிட 20 நொடிகள் முன்னதாக கிளம்பியுள்ளது.
மினாமி நகரயாஹமா என்ற இடத்திலிருந்து டோக்கியோ செல்லவேண்டிய சுகுபா எக்ஸ்பிரஸ், காலை 9.44.40 விநாடிகளுக்குப் புறப்பட வேண்டும். ஆனால், 20 நொடி முன்னதாகப் புறப்பட்டுப் போய்விட்டது. இதனால் எந்த பயணியும் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும் சுகுபா ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரிய செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. யாருமே பாதிக்கப்படாத போதிலும் 20 விநாடிகளுக்காக ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்ட சம்பவத்தை அறிந்து நெகிழ்ந்த ஜப்பான் மக்கள், ஜப்பான் அரசை பாராட்டி தள்ளுகின்றனர்.