உலக கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் - கொலம்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை, ஜப்பான் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது, பல நாட்டு ரசிகர்கள் கண்டு களித்தனர். விதவிதமான முக அலங்காரங்களுடனும், பொம்மைகள், பதாகைகள், கொடிகளைச் சுமந்து தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், ஜப்பான் ரசிகர்களோ, குப்பைகள் போடும் பிளாஸ்டிக் பையைச் சுமந்து கொண்டு, தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். போட்டியில் ஜப்பான் அணி வெற்றி பெற்றவுடன் அனைவரும் அரங்கத்தை விட்டு வெளியேறினர்.

ஆனால், ஜப்பான் ரசிகர்களோ, தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பையில், ரசிகர்கள் வீசிய குப்பைகளை எடுத்து போட்டுக் கொண்டனர். அரங்கத்தை தாங்களாகவே அவர்கள் சுத்தம் செய்தனர். ஜப்பான் ரசிகர்களின் இந்த செய்கையை அனைவரும் பாராட்டினர். ஜப்பான் ரசிகர்கள், அரங்கத்தை சுத்தம் செய்யும் வீடியோ இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.