Jammu And Kashmir Adopts GST Resolution Amid Protests By Opposition

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு (ஜி.எஸ்.டி.) ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தல் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் மட்டும் அமலுக்கு வரவில்லை.

அந்த மாநிலச் சட்டசபையில் மாநில ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறாததால், அமலுக்கு வராமல் இருந்தது. இதையடுத்து, நேற்று மாநிலச் சட்டசபையில் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வரைவு மசோதாவை நிதி அமைச்சர் ஹசீப் டிரபு அறிமுகப்படுத்தினார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அதை புறக் கணித்தனர். மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதித்துவத்தை ஜி.எஸ்.டி. சட்டம் செல்லாததாக்கிவிடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

ஆனால், பலத்த எதிர்ப்புக்கிடையே நிதி அமைச்சர் ஹசீப் டிரபு அறிமுகப்படுத்தி பேசுகையில், “ ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வந்தபின், ஜனநாயகத்தில் புதிய பாரம்பரியத்தை தொடங்குவோம். ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேறுவதால், மாநிலத்துக்கு கொடுத்துள்ள சிறப்பு அந்தஸ்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது’’ என்று தெரிவித்தார்.

ஆனால் இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முகம்மது யூசுப் தாரிகமி, காங்கிரஸ் கட்சியின் நவாங் ரிக்ஜின் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகம்மது யூசுப் பேசுகையில், “ காஷ்மீர் வரலாற்றில் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த முறையை அரசு மீறிவிட்டது. வரலாற்றிலேயே முதல்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஜனாதிபதிக்கு ஒப்புதல் பெற்றபின், அது நிறைவேற்றப்பட உள்ளது. ஜி.எஸ்.டி. மசோதா முதலில் சபைக்கு தெரிவிப்பதற்கு முன் அது ஜனாதிபதிக்கு ஒப்புதல் பெற்று இப்போது இங்கு வந்துள்ளது’’ என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் நவாங் ரிக்ஜின் பேசுகையில், “ ஜி.எஸ்.டி. மசோதாவை அரசு கையாண்ட விதம் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்பை குறைத்துவிட்டது’’ என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மக்கள் ஜனநாயக முன்னனி தலைவர் ஹக்கிம் முகம்மது யாசின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வௌிநடப்பு செய்தனர். முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் நேற்று அவைக்கு வரவில்லை.

இதையடுத்து, நிதிஅமைச்சர் ஹசீப் டிரபு, “ இன்று இரவு முதல் மாநிலத்தில் ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வருகிறது’’ என அறிவித்தார். இதையடுத்து, அவைத்தலைவர் கவிந்தர் குப்தா அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையடுத்து ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துவிட்டார், அதை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நாட்டிலேயே கடைசி மாநிலமாக காஷ்மீரில் ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வந்தது.