கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த சீனாவின் பிரபல அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா பொதுவெளியில் தோன்றினார். இது அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இந்த நிறுவனத்தின்  தலைவரானவர் ஜாக் மா,  சிறிய தொகையில் ஆரம்பிக்கப்பட்ட தனது நிறுவனத்தை, தனது கடின உழைப்பால், வர்த்தக அறிவாற்றலால் சுமார் 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிர்வாணமாக உயர்த்தினார் ஜேக்மா. சர்வதேச அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் அலிபாபா கோலோச்சுகிறது. 

இந்நிறுவனம் e-commerce மற்றும் டிஜிட்டல்  பணப்பரிவர்த்தனை சந்தையை மொத்தமாக தன் கைக்குள் வைத்துள்ளது. இதன் மூலம் சீனாவின் மிகப்பெரிய பணக்காரராக ஜாக் மா உயர்ந்துள்ளார். தற்போது அலிபாபா உலகின் பல்வேறு நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை பரப்பியுள்ளது. இந்நிலையில் சீன அரசு அதிகாரிகளுக்கும் ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியிலான மோதல் ஏற்பட்டது. ஜாக் மா எப்போதும் சுதந்திரமாக செயல்பட கூடியவர், அவரின் நடவடிக்கையை விரும்பாத  சீன அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.  சீன அதிகாரிகள் தனது நிறுவனத்தில் வளர்ச்சியைத் தடுப்பதாக ஜேக் மா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் முதல் அவர் மாயமானார். 

ஜி ஜின்பிங் அரசு ஜாக் மாவை கைதுசெய்து வைத்திருக்கக் கூடும் என அந்நாட்டு மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. மிகப்பெரிய தொழில் அதிபரான ஜாக் மா மாயமானது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் ஒட்டுமொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று பொதுவெளியில் அவர் தோன்றியுள்ளார். சீனாவில் உள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 100 ஆசிரியர்களுடன் அவர் காணொளி வாயிலாக உரையாடியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் சந்திப்போம் என கூறியுள்ளார். அவர் இன்னும் சீன அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளாரா என்பது குறித்து உறுதியான இல்லை. அவர் பொதுவெளியில் தோன்றியது அவரது ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.