மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய ஈரானை கண்டிக்க வேண்டும் என்று ஐநாவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.

Israel Tells UN To Condemn Iran: இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள சோரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், இஸ்ரேல் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஈரானின் நடவடிக்கை போர்க்குற்றம் மற்றும் பயங்கரவாதம் என்று கூறியுள்ள இஸ்ரேல், தாக்குதல் நடத்தப்பட்டது யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது தான் என்றும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

இதுவரை 450 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1170 பேர் காயமடைந்துள்ளனர். 40 இடங்களில் ஏவுகணைகள் விழுந்துள்ளன. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் 25000 சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து 6500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மீதான தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு மந்திரி உரையாற்ற அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு

இதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஈரான் வெளியுறவு மந்திரி உரையாற்ற அனுமதி அளித்ததற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அவமானகரமானது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஆரக் அணு மையம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலைக் கண்டிக்க ஐ.நா.விடம் ஈரான் முறையிட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சியின் உரையுடன் தொடங்குகிறது என்பது தான் இஸ்ரேல் எழுப்பும் பிரச்சினை. இன்று ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகிறது. ஈரான்-இஸ்ரேல் மோதல்தான் இப்போது ஐ.நா. முன் உள்ளது.

இந்தியாவுக்காக வான்பாதையை திறந்த ஈரான்

இஸ்ரேல்-ஈரான் மோதலால் மூடப்பட்டிருந்த வான்பாதையை இந்தியாவுக்காக மட்டும் ஈரான் திறந்துள்ளது. மோதல் நிறைந்த ஈரானிய நகரங்களில் சிக்கியுள்ள 1,000 இந்திய மாணவர்களை மீட்கும் 'ஆபரேஷன் சிந்து' முயற்சியின் ஒரு பகுதியாகவே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாணவர்களுடன் முதல் விமானம் இன்று இரவு 11 மணிக்கு டெல்லியை வந்தடையும்.

ஈரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

இரண்டாவது மற்றும் மூன்றாவது விமானங்கள் நாளை (சனிக்கிழமை) வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையேயான மோதல் காரணமாக, ஈரானிய வான்வெளி பெரும்பாலான சர்வதேச விமானங்களுக்கு மூடப்பட்டிருந்தது. இருப்பினும், மாணவர்களை மீட்க இந்தியாவுக்கு சிறப்பு வான்பாதை அனுமதிக்கப்பட்டுள்ளது.

'ஆபரேஷன் சிந்து'

மோதல் முடிவுக்கு வரும் சூழ்நிலை இல்லாததால், ஈரானில் இருந்து இந்தியக் குடிமக்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து'வை இந்தியா புதன்கிழமை அறிவித்தது. வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கு இந்தியா மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஈரானில் வசிக்கின்றனர். அதில் பாதி பேர் மாணவர்கள்.

ஈரானுக்கு இந்திய அரசு நன்றி

வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, 110 இந்திய மாணவர்கள் சாலை மார்க்கமாக ஆர்மீனியாவின் யெரெவானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து 18-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவியதற்காக ஈரான் மற்றும் ஆர்மீனிய அரசாங்கங்களுக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.