காசாவில் நிலவும் அசாதாரண சூழல்: அவசர கூட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் குழு அழைப்பு!
பாலஸ்தீனம் காசாவில் நிலவும் அசாதாரணமான சூழல் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் குழு அழைப்பு விடுத்துள்ளது
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வருகிறது. போர் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு 3500ஐத் தாண்டியுள்ளது. இதனிடையே, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும், பாலஸ்தீனத்தின் பிராந்தியமான காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்தியது. இதன்காரணமாக காசா மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வருகின்றனர்.
பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் முகாம்களை அழிக்கும் பொருட்டு, இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக வடக்கு காசா பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்தது. இந்த கெடு நீடிக்கப்பட்டு பின்னர் முடிவடைந்ததையடுத்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா நிலைமை குறித்து விவாதிக்க சவுதி அரேபியாவில் ஒரு ‘அவசர அசாதாரண கூட்டத்திற்கு’ இஸ்லாமிய நாடுகளின் உயர்மட்ட குழு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்களின் இந்த அவசரக் கூட்டத்தை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.
இஸ்ரேலில் 2வது போர்முனை உருவாகிறதா? ஈரான் ராணுவ வாகனங்கள் மீது திடீர் வான்வழித் தாக்குதல்!
“இஸ்லாமிய உச்சி மாநாட்டின் தற்போதைய அமர்வு மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) நிர்வாகக் குழுவிற்கு தலைமை ஏற்றுள்ள சவுதி அரேபியாவின் அழைப்பின் பேரில், காசா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகரித்து வரும் இராணுவ நிலைமை மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலைமைகள் மற்றும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிவர்த்தி செய்வது குறித்து விவாதிக்க அமைப்பின் செயற்குழு அவசரமான அசாதாரண கூட்டத்தை கூட்டுகிறது.” என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு கண்டங்களில் பரவியுள்ள 57 நாடுகளின் உறுப்பினர்களுடன் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பிறகு இரண்டாவது பெரிய அமைப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு தன்னை ‘முஸ்லிம் உலகின் கூட்டுக் குரல்’ என்றும் அழைத்துக் கொள்கிறது.
முன்னதாக, காஸாவிற்குள் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதையும், பாதுகாப்பற்ற பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கும் சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக இஸ்ரேலுக்கு சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது.