இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் ஏன் இவ்வாறு கூறினார் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

America favours pakistan over india : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகளைப் பற்றி பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்து, உலக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது பேச்சுகளை அடிப்படையாகக் கொண்டு, சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்தது. அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிட்டது. அடுத்ததாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது.

இந்தியா- பாகிஸ்தான் ராணுவ மோதல் 

இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே மோதல் அதிகரித்தது. இரு நாட்டில் எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் திடீரென இரு தரப்பிலான ராணுவ மோதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை முதல் முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அடுத்தாக தான் இந்திய அரசு அறிவித்தது. எனவே இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையிட்டதாக பேசப்பட்டது. . இந்தச் சூழலில், ட்ரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் மூளவிருந்ததைத் தான் தடுத்து, ஒரு "போர் நிறுத்த ஒப்பந்தத்தை" ஏற்படுத்தியதாகக் கூறினார். அவர், "நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்" என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை "அற்புதமான மனிதர்" என்றும் புகழ்ந்தார். இந்தக் கருத்துகள், சமூக ஊடகங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில், பெரும் விவாதத்தைத் தூண்டின.

போரை நிறுத்தியது நான் தான் - ட்ரம்ப் பிடிவாதம்

நேற்றைய தினம் (ஜூன் 18, 2025) பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிரை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் சந்தித்தார். இந்தச் சந்திப்பு, மோடியுடன் 35 நிமிட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து நடைபெற்றது. இந்த இரு சந்திப்புகளும், ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் மத்தியஸ்தம் செய்ய முயல்வதாகவே பலரால் பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மத்தியஸ்த முயற்சி உண்மையில் நடந்ததா? என்ற கேள்வி எழுந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் இராணுவங்களின் நேரடி பேச்சுவார்த்தைகள் மூலமாகவே போர் நிறுத்தத்தை எட்டியதாகவும், அமெரிக்காவோ அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பினரோ இதில் தலையிடவில்லை என்றும் மோடி தெளிவுபடுத்தினார். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை, இனியும் ஏற்காது என்று திட்டவட்டமாக கூறினார்.

இதனிடையே மோடி, ட்ரம்ப் அமெரிக்காவிற்கு வரும்படி மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பை ஏற்காமல், முன்பே திட்டமிடப்பட்ட குரோஷியா பயணத்தை மேற்கொண்டார். இது, இந்தியாவின் சுயாட்சி மற்றும் இருதரப்பு உறவுகளை வலியுறுத்தும் நிலைப்பாட்டை மேலும் தெளிவாக்கியது. 

இந்தியா - பாக் மோதல் நிறுத்தம்- ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூற காரணம் என்ன.? 

இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் மோதலை தான் நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இது டொனால்ட் ட்ரம்ப் தனது ஆளுமையை பெருமைப்படுத்துவதற்கும், உலக அரங்கில் தன்னை ஒரு சக்திவாய்ந்த தலைவராகக் காட்டுவதற்கும் இதுபோன்ற கருத்துகளை கூறுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஒரு முக்கியமான அணு ஆயுதப் பதற்றமாக இருந்ததால், அதை நிறுத்தியதாகக் கூறுவது அவருக்கு சர்வதேச அளவில் புகழைத் தேடித் தரும். ட்ரம்ப் இந்தக் கூற்றின் மூலம் அமெரிக்காவின் புவிசார் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்த முயல்வதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தக உறவுகளைப் பயன்படுத்தி மோதலை நிறுத்தியதாகக் கூறுவது, அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் உலக அளவில் எவ்வளவு தாக்கம் செலுத்த முடியும் என்பதைக் காட்டுவதற்கு உதவுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க உள்நாட்டு அரசியலில், ஒரு பெரிய சர்வதேச மோதலைத் தடுத்து அமைதியை ஏற்படுத்தியதாகக் கூறுவது, ட்ரம்பின் ஆதரவாளர்களிடையே அவரது தலைமைத்துவ பிம்பத்தை வலுப்படுத்த உதவும். இது அவரது மறுதேர்தல் அல்லது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவைத் திரட்ட உதவலாம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் மத்தியஸ்தம் இல்லாமலேயே பாகிஸ்தானின் கோரிக்கையால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ட்ரம்பின் கூற்றுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த சர்ச்சை அவருக்கு மேலும் கவனத்தை ஈர்க்க உதவியிருக்கலாம், இது அவரது பாணிக்கு ஏற்றதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.