மழை பெய்யாததற்கு காரணம் இஸ்ரேல்தான்...! 'கிணத்தைக் காணோம்' வடிவேலு பாணியில் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டும் ஈரான்!
ஈரானில் மழை பெய்யக் கூடாது என்பதற்காக இஸ்ரேலும் இன்னொரு நாடும் கூட்டு சதி செய்து மேகத்தை தடுத்து விடுவதாக ஈரான் ராணுவ தளபதி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த் திரைப்படமான கண்ணும் கண்ணும் படத்தில் நடிகர் வடிவேலு, போலீஸ் நிலையம் சென்று, அய்யா, கிணத்தக் காணோம்யா... வட்டக் கிணறுய்யா என்று புகார் கூறினார். வடிவேல் நடித்த அந்த காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதேபோன்ற ஒரு புகாரை ஈரான் நாட்டு ராணுவ தளபதி குலாம் ரேசா ஜலாலி, இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது வடிவேல் கூறிய கிணற்றுக்கு பதிலாக மழை மேகம் திருடப்படுவதாக கூறியுள்ளார்.
இது குறித்து குலாம் ரேசா ஜலாலி கூறுகையில், ஈரான் நாட்டின் வானிலை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில் வெளிநாட்டு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்ரேலும், இன்னொரு நாடும் கூட்டுச்சதி செய்து, ஈரானில் மழை பெய்யக் கூடாது என்பதற்காக மேகத்தை தடுத்து விடுகின்றன. எங்கள் மேகமும், பனியும் திருடுபோகின்றன என்றும் குலாம் ரேசா ஜலாலி கூறினார்.
அது மட்டுமல்லாமல், 2,200 மீட்டர் உயரத்துக்குமேல், ஆப்கானிஸ்தானுக்கும், மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையே ஈரானை தவிர பிற அனைத்து பகுதிகளும் பணியால் மூடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தங்கள் நாட்டு மேகத்தையும், பனியையும் இஸ்ரேல் திருடுவதாக ஈரான் ராணுவ தளபதி குலாம் ரேசா ஜலாலி கூறியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.