குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் அப்துல் லத்தீப் ஜமீல் முகமது என்பவர் தென்மேற்கு லண்டனில் இருக்கும் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்றும், இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் செல்வாக்கான குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த தொடர் குண்டுவெடிப்பில் இலங்கையில் 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

 

இந்நிலையில் இந்த அதிபயங்கர தாக்குதல் பற்றிய விசாரணையில் இலங்கை புலனாய்வுத் துறைக்கு ஒத்துழைக்க, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க புலனாய்வு துறை களமிறங்கியுள்ளன.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜயவர்தனே கூறுகையில், அதிபயங்கர குண்டுவெடிப்பில் சந்தேகத்துக்குரிய நபர்களில் ஒருவர் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் மேல் படிப்பு படித்துவிட்டு இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்.

இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகள் அனைவருமே படிப்பிலும், பணத்திலும் உயர்ந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். மிகவும் செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள், வெளிநாடுகளில் சட்டம் உள்ளிட்ட மேல் படிப்பு முடித்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.