indonesia earthquake: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!!
குறைந்தது 271 பேரை காவு வாங்கிய மேற்கு ஜாவா நகரமான சியாஞ்சூரில் திங்களன்று ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்திற்குப் பின்னர் இடிபாடுகளில் இருந்து ஆறு வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கும் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த ஆறு வயது சிறுவன் கடந்த புதன் கிழமை மீட்கப்பட்டான். இரண்டு நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி சிக்கி இருந்து மீட்கப்பட்டு இருப்பது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இன்னும் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் பலரையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
"அஜ்கா உயிருடன் இருப்பதை நாங்கள் உணர்ந்தவுடன், அனைவரும் ஆனந்தக் கண்ணீர் விட்டோம். அதிசயம் போல் உணர்ந்தேன்'' என்று 28 வயதான உள்ளூர் தன்னார்வலர் ஜெக்சன் வியாழக்கிழமை ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சியாஞ்சூரில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டமான குகெனாங்கில் இடிந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து சிறுவன் அஜ்காவை தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள் மீட்கும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அதில், அந்த சிறுவன், நீல நிற சட்டை மற்றும் கால் சட்டையை அணிந்து கொண்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. நிலநடுக்கத்தில் அஜ்காவின் தாய் உயிரிழந்து விட்டார். சிறுவனை மீட்ட சில மணி நேரத்திற்கு முன்பாகத்தான், அவரது தாயை அந்த இடத்தில் இருந்து மீட்டுள்ளனர். ஆனால், சடலமாக மீட்டுள்ளனர் என்பது தான் சோகமான விஷயம். சிறுவனின் பாட்டியும் உயிரிழந்துவிட்டார். அவரது உடலுக்கு அருகில் இருந்துதான் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறான்.
சிறுவனின் வீட்டின் இடது பக்கத்தில், ஒரு படுக்கையில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். தலையணைக்கும், கான்கிரீட் பலகைக்கும் இடையே 10 சென்டிமீட்டர் இடைவெளியில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டு இருக்கிறான். அந்த இடம் குறுகியதாகவும், வெப்பம் அதிகமாகவும், காற்று புகுவதற்கு போதுமான இடம் இல்லாமலும் இருந்துள்ளது. நிலநடுக்கத்தில் காணாமல் போன 40 பேரை தொடர்ந்து மீட்கும் பணிகள் நடந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.