இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழப்பு 300 பேர் காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்து, 300 பேர் காயமடைந்து இருப்பதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய தீவுப் பகுதியான ஜாவாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. "தற்போதைக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த மருத்துவமனையில் மட்டும், கிட்டத்தட்ட 20 பேர் இறந்தனர் மற்றும் குறைந்தது 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது'' என்று சியாஞ்சூர் நிர்வாகத் தலைவர் ஹெர்மன் சுஹர்மன் கூறியதாக அந்த நாட்டின் மெட்ரோ டிவி தெரிவித்துள்ளது. துவக்கத்தில் 20 பேர் உயிரிழந்து இருப்பதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 46 ஆக அதிகரித்துள்ளது.
பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகள் முழுவதும் இடிந்து விழுந்து, மக்கள் ஆங்காங்கே உயிருக்கு அஞ்சி அலறியபடி செல்கின்றனர். சிலர் உடலில் அடிபட்டு ரத்தம் வடிய என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக அமர்ந்திருக்கிறார். நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் பாதுகாப்புக்காக தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என்றும், ரிக்டர் அளவில் 5.6 ஆக இருந்தது என்றும் அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு ஜகர்த்தாவில் வலுவாக உணரப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"நிலநடுக்கம் மிகவும் வலுவாக உணர்ப்பட்டது. நானும் என்னுடன் பணி செய்து வந்தவர்களும் ஒன்பதாவது மாடியில் உள்ள எங்கள் அலுவலகத்திலிருந்து அவசர படிக்கட்டுகள் வழியாக வெளியேறினோம்" என்று தெற்கு ஜகார்த்தாவைச் சேர்ந்த ஊழியர் விதி ப்ரிமதானியா கூறியுள்ளார்.
நாட்டில் நிலநடுக்கம் அடிக்கடி நிகழும் என்றாலும், ஜகார்த்தாவில் அவை அரிதாகவே நிகழும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த முறை வலுவாக உணரப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 25 பேர் உயிரிழந்தனர். 460- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜனவரி 2021-ல், மேற்கு சுலவேசி மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 6,500 பேர் காயமடைந்தனர். 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால், சுனாமி ஏற்பட்டு 12க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.