இந்தோனேஷிய கடலில் இந்தியாவின் ஐஎன்எஸ் சிந்துகேசரி நீர் மூழ்கிக் கப்பல்; சீனாவுக்கு எச்சரிக்கையா?
ஐஎன்எஸ் சிந்துகேசரி இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்ட முதல் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
3,000 டன் எடை கொண்ட டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல் சுந்தா ஜலசந்தி வழியாக பயணித்த பின்னர் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவுக்குச் சென்றது. இந்தப் பயணமானது ஐஎன்எஸ் சிந்துகேசரியின் முதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
தென் கிழக்கு சீனக் கடலில் சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்தோனேஷியா கடல் பகுதியில் இந்திய நீர் மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
"இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், ஜகார்த்தாவிற்கு இந்திய நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துகேசரி வருகையை இந்தோனேசிய கடற்படை அன்புடன் வரவேற்கிறது" என்று இந்தோனேசியா கடற்படை ட்வீட் செய்துள்ளது.
சிந்துகேசரியின் பயணம் இந்திய கடற்படையின் திறன்களை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளை நோக்கி இந்தியா அனுப்பி இருக்கும் ராஜதந்திர மற்றும் ராணுவ வெளிப்பாட்டின் ஒரு செய்தியாகவும் பார்க்கப்படுகிறது. தென் சீனக் கடல் பிராந்தியத்தில் மற்ற ஆசிய நாடுகளுடன் சீனாவுக்கு விரோதம் வளர்ந்து வரும் நிலையில், நீர் மூழ்கிக் கப்பலின் பயணம் பாதுகாப்பு கூட்டணிக்கான அழைப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நடுனா கடலில் சீன கடலோர காவல்படை கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில் சில வாரங்களுக்குப் பிறகு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இந்தோனேஷியாவில் நிறுத்தப்பட்டு உள்ளது. நடுனா கடல் பகுதியில் இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கிறது. எனவே, சீனா இதை குறிவைத்து உரிமை கொண்டாடி வருகிறது. ஐஎன்எஸ் சிந்துகேசரி தவிர, உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ்சும் சீன ஊடுருவலைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய போர்க்கப்பல்கள் இந்தோனேசியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருகின்றன. ஆனால், இந்த முறை இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் சிந்துகேசரியின் பயணம் தனது திறனையும், செயல்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கான செயல்பாட்டு பயிற்சி 21 பிலிப்பைன்ஸ் வீரர்களுக்கு இந்தியா சமீபத்தில் அளித்து இருந்தது. இதையடுத்தே இந்தோனேஷியாவில் இந்திய நீர் மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் சிந்துகேசரி நிறுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிலிப்பைன்சுக்கு கப்பல் எதிர்ப்பு பிரம்மோஸ் பேட்டரிகளை இந்தியா வழங்குகிறது. ஐஎன்எஸ் சிந்துகேசரி என்பது ரஷ்ய தயாரிப்பான சிந்துகோஷ் வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒரு பகுதியாகும்.