நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெஹல் கோஸ்வாமி, ஒரே நேரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணிபுரிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாதம் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெஹல் கோஸ்வாமி (39) என்பவர், ஒரே நேரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணிபுரிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஒரு அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வந்த கோஸ்வாமி, வீட்டில் இருந்து பணிபுரியும் (Work From Home) முறையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான மால்வாவில் உள்ள ஒரு செமிகண்டக்டர் நிறுவனத்திலும் ஊழியராகப் பணிக்குச் சேர்ந்துள்ளார். அந்த நிறுவனத்திலும் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையில் பணியாற்றியுள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள்

இந்த இரு வேலைகளின் மூலம் கோஸ்வாமி இந்திய மதிப்பில் சுமார் ரூ. 40 லட்சம் வரை சம்பாதித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோஸ்வாமி தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது குறித்து மர்ம நபர் ஒருவர் நியூயார்க்கில் உள்ள அரசு அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோஸ்வாமி ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர வேலைகளைச் செய்துவந்தது உறுதிசெய்யப்பட்டது.

15 ஆண்டுகள் சிறை தண்டனை

இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கோஸ்வாமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 15,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12.5 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர் நேர்மையுடன் சேவை செய்ய வேண்டியது அவசியம் என்றும், இந்தக் குணம் மக்கள் நம்பிக்கையை உடைப்பதாகவும் உள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயல் "மூன் லைட்டிங்" (Moonlighting) என்று அழைக்கப்படுவதாகவும், இது சட்டப்படி தவறு என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.