Asianet News TamilAsianet News Tamil

இஸ்ரேலில் இந்தியர் பலி! லெபனான் நடத்தி ஏவுகணை தாக்குதல்... இந்தியர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் காயமடைந்துள்ளனர். அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Indian man killed, two others injured in Israel after Lebanon fires anti-tank missile sgb
Author
First Published Mar 5, 2024, 4:44 PM IST

இஸ்ரேலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளார். லெபனானில் இருந்து இந்த ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. மூன்று பேருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் என்ற இடத்தில் ஒரு விவசாய நிலத்தில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாக மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். லெபனானைச் சேர்ந்த ஷைட் ஹெஸ்புல்லா அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் இந்த அமைப்பு அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பத்னிபின் மேக்ஸ்வெல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் ஜிவ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் தவிர புஷ் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். புஷ் ஜோசப் ஜார்ஜுக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வின் லேசாக காயம் அடைந்துள்ளார். இருவரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை:

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது. இது குறித்து இந்தியத் தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, வடக்கு, தெற்கு எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவி எண்ணையும் இந்தியத் தூதகரம் அறிவித்துள்ளது. +972-35226748 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவசர உதவி கோரலாம். 24 மணிநேரமும் இந்த அவசர உதவி எண் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி கோருவதற்கு வசதியாக cons1.telaviv@mea.gov.in என்ற ஈமெயில் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios